Tuesday, September 28, 2010

அமெரிக்க மாலை பொழுது

ஏப்ரல் 2008 அன்று ஒரு அழகான அமெரிக்க மாலை பொழுது. நானும் எனதருமை மனைவியும் அமைதியாக உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தோம். அவளின் மனதின் பாரம், ஒரு சுமையாக, பெரும் சுமையாக, என் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அவள் மனதும் கண்களும் எப்பொழுதும் விவரிக்க முடியாத வேதனையால் கனத்து போயிருந்தது. அவளுக்குள் இருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் தேய்ந்து துவண்டு கொண்டே சென்றது. என்ன செய்வது! நான் தான் அவளின் ஒரே நம்பிக்கை, ஒரே அறுதல். நானும் நிலை குலைந்தால், பிறகு எப்படி ஜீவிப்பது. அப்போது தான் ஒரு எண்ணம் தோன்றியது. எப்படி அப்படி ஒரு எண்ணம் தோன்றியது என்று தெரியவில்லை. திடீரென்று நான் கூறினேன் "நாம் கண்டிப்பாக வெல்வோம்", என்று. அத்துடன் நிற்கவில்லை. அதை ஆங்கிலத்தில் மொழி பெயைர்த்து, பெரிய எழுத்தில் காகிதத்தில் அச்சடித்து சுவரில் எங்கெல்லாம் பார்க்க முடியுமோ அங்கெல்லாம் ஓட்டினேன். இதை தான் தெய்வ செயல் என்று சொல்கிறார்களோ? சரியாக, ஒரு வருடத்தில் எங்கள் வாழ்வில், அந்த வாசகம் "நாம் கண்டிப்பாக வெல்வோம்", ஸ்ரீவத்சன் ஆக  உருமாறி  வந்தது. எங்கள் ஸ்ரீவத்சன், எங்கள் வாழ்வின் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை. எனக்கு நன்றாக தெரியும், அவன் உலகை ஆள  பிறந்தவன். 

No comments:

Post a Comment